அத்தையின் ஒரே சொந்தமான எங்களை ஓரங்கட்டி விட்டனர் – ஜெ.தீபா

சென்னை: என் அத்தையின் கை பிடித்து நடந்தவள் நான். ஒரே குடும்பத்தில் ஒன்றாக இருந்த நாங்கள், சில தொந்தரவுகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டோம் என்று தீபா, புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் தீபாவை அதிமுக தொண்டர்கள் அரசியலுக்கு அழைக்கின்றனர். ஆனால் தீபா தொலைக்காட்சிகள், ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.
1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற போது முதல் வரிசையில் அமர்ந்தது எங்கள் குடும்பம்தான் என்றும் 1995ம் ஆண்டுக்குப் பிறகு நாங்கள் பின்னுக்கு தள்ளப் பட்டோம் என்று கூறினார் தீபா.
வெளியில் இருந்து ஒருவரை திடீரென்று வளர்ப்பு மகன் என்று கூறியதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
விரும்பத்தகாத நிகழ்வுகளினால் நாங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டோம்.
2014ம் ஆண்டு பெங்களூர் சிறையில் அத்தை இருந்த போது என்னை பார்க்க விருப்பப் பட்டார். அதனால்தான் நான் பெங்களூர் சென்றேன். ஆனால் என்னை பார்க்க விடவில்லை. அவர் ஜாமீனின் வந்த பின்னர் நான் போயஸ் தோட்டத்து வீட்டுக்கு சென்ற போது என்னை உள்ளே விடவில்லை. இதுதான் ஊடகங்களில் செய்தியானது.
சசிகலா உறவினர்கள் என்னை தொடர்பு கொண்டனர். அவர்கள்தான் என்னை போயஸ் தோட்டத்திற்குள் விடவில்லை.
2011ம் ஆண்டு சசிகலா போயஸ் தோட்ட வீட்டிற்குள் இல்லாத போது நான் வந்தேன். ஆனால் சந்திக்க முடியவில்லை. எனது அத்தையை நம்பி எதற்காகவும் நாங்கள் இருந்ததில்லை. அதற்கான சூழ்நிலை ஏற்பட்டதில்லை. அத்தையுடன் நேரடியாக பேச முடிந்ததில்லை. சசிகலா குடும்பத்தினர் மூலம்தான் பேச முடிந்தது என்று கூறியுள்ளார் தீபா.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது அத்தையை பார்க்க விடவில்லை. அத்தை என்னை பார்க்க விடவில்லை என்பது பொய். 2015 ஆம் ஆண்டு எனக்கு அத்தையின் உதவியாளரிடம் இருந்து தொலைபேசி வந்தது. அத்தை என்னை பார்க்க விரும்புவதாக கூறினார். நான் போயஸ் தோட்டத்திற்கு சென்ற போதும் என்னால் பார்க்க முடியாமல் போனது.
அப்பல்லோவில் அனுமதி
அத்தையை அப்பல்லோவில் அனுமதித்திருக்கிறார்கள் என்று நான் டிவி செய்தியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன். அங்கே சென்று 3 நாட்களும் பார்க்க முடியவில்லை. எனது அத்தை மருத்துவமனையில் 75 நாட்கள் எப்படி இருந்தார் என்பதை மருத்துவமனை நிர்வாகம் மேலும் அதிகமான விளக்கங்களுடன் தெரிவிக்க வேண்டும். நான் அவரது குடும்பத்தை சேர்ந்தவள் என்ற முறையில் இதில் எனக்கு கவலை உண்டு. ஏதாவது என்றால் தகவல் தெரிவிப்பதாக கூறினார்.
தீபக் அனுமதிக்கப்பட்டது ஏன்?
தீபக்கை அனுமதித்தனர். என்னை மட்டும் அனுமதிக்காதது ஏன் என்று தெரியவில்லை. இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா என்பதை சசிகலா குடும்பத்தினர் விளக்க வேண்டும். தீபக் இத்தனை நாட்களாக சொல்லவில்லையே? இப்போது மட்டும் சொல்வது ஏன்?
என்ன அதிகாரம் உள்ளது?
என் அத்தையை பார்க்கக் கூடாது என்று தடுக்க அவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது. அத்தை என்னை நன்றாக புரிந்தவர். எனவேதான் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு போகவில்லை. இது என்னுடைய பெர்சனல், நான் உறவினராகத்தான் பார்க்க ஆசைப்பட்டேன். வேறு எதற்காகவும் ஆசைப்படவில்லை.
அத்தையின் மரணத்தால் பாதிப்பு
அத்தையின் மரண செய்தி கேட்டு நான் அதிகம் பாதிக்ப்பட்டேன். என்னை முகத்தை கூட பார்க்க விடாமல் செய்து விட்டனர். இது என்ன நியாயம் என்று தெரியவில்லை.
அத்தையின் கஷ்ட காலத்தில் நாங்களும்தான் கூட இருந்தோம். அதை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்கின்றனர். நாங்கள் எதையும் வெளிப்படுத்துவதில்லை என்று கூறினார் தீபா.

Related videos

Leave a Reply

%d bloggers like this: