பஞ்சாப் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் 2வது பட்டியலில் சித்து மனைவி இல்லை

சண்டிகர்: பஞ்சாபில் இன்னும் ஐந்தாறு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் 2வது பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 16 பேர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், கிரிக்கெட் வீரர் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் பெயர் இடம் பெறவில்லை. அமிர்தசரஸ் கிழக்கு தொகுதி பாஜ எம்எல்ஏவாக இருந்த கவுர், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜவில் இருந்து விலகி அண்மையில் காங்கிரசில் இணைந்தார். இவரை தொடர்ந்து இவரது கணவரும் கிரிக்கெட் வீரருமான சித்துவும் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராகுலை சந்தித்து, சித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சூழலில் நேற்று வெளியிட்ட 16 பேர் பட்டியலில் கவுர் பெயர் இடம் பெறவில்லை. ஏற்கனவே மொத்தமுள்ள 117 இடங்களில் 77 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை காங்கிரஸ் வெளியிட்டு விட்டது. சித்து தனக்கும், தனது மனைவிக்கும் எம்எல்ஏ சீட் தரப்பட வேண்டுமென்று கோரி வந்தார். ஆனால், யாராவது ஒருவருக்குத்தான் சீட் தர முடியும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் வெளிப்படையாக அறிவித்து விட்டார். அதனால்தான், சித்து காங்கிரசில் சேருவதில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், சித்துவின் மனைவிக்கு 2வது பட்டியலிலும் சீட் தரப்படாததால், காங்கிரசில் சித்து சேருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனாலும், விரைவில் சித்து தனது புதிய கட்சியை காங்கிரசுடன் இணைப்பார் என்றும், வரும் தேர்தலில் அவர் காங்கிரசுக்கு தீவிர பிரசாரம் செய்வார் என்றும் காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநில தலைவரும், முதல்வர் வேட்பாளருமான அமரீந்தர் சிங் கூறுகையில், ”வெற்றி பெறுவார்கள் என உறுதியாக தெரியும் நபர்களின் பட்டியல் மட்டுமே முதல் சுற்றில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பட்டியல் வெளியிடப்படும், அதற்குள் அனைவரிடமும் பேசி, பிரச்னைகள் தீர்க்கப்படும்” என்றார்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: