“ஸ்வைப் பண்ணுங்க… ஒரு கோடி ரூபாய் வெல்லுங்க!” இது மத்திய அரசின் விளம்பரம் #CashlessEconomy

உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் மாதம் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தியா முழுவதும் நிலவும் நிழல் பொருளாதாரத்தை ஒழிக்கவும், கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், தீவிரவாதிகள் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று அப்போது பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.
மேலும் ரொக்கப்பணம் இல்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட டிஜிட்டல் முயற்சி என்றும் மத்திய அரசு தெரிவித்தது. ஆனாலும், மோடியின் ‘டீமானிட்டைசேஷன்’ அறிவிப்பு வெளியாகி ஒருமாதம் முடிந்த நிலையிலும், வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் காத்திருக்கும் நிலை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
இந்நிலையில், ‘நித்தி ஆயோக்’ தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் டெல்லியில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார் அதன்படி, டெபிட் மற்றுட் கிரெடிட் அட்டைகள் மூலம் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வோருக்கு மொத்தம் 340 கோடி ரூபாய் வரை பரிசுகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது மிகவும் குறைந்த அளவிலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையே நடைபெறுகிறது. இதன்காரணமாக, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு இந்த பரிசுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “லக்கி கிரஹக் யோஜனா” எனும் திட்டம், சாதாரண மக்களுக்கானதாவும், “டிஜி தன் வியாபார் யோஜனா” என்ற வியாபாரிகளுக்கானதாகவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு திட்டங்களும், கிறிஸ்துமஸ் பண்டிகையான வரும் 25-ம் தேதி முதல் தொடங்குகிறது. இத்திட்டத்தின்கீழ், வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை பரிசுகள் வழங்கப்படும் என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஒரு மக்கள் இயக்கமாக நடைமுறைப்படுத்துவதே அரசின் நோக்கம் என்றும் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
தினசரி மற்றும் வாராந்திர பரிசுகள்:
“லக்கி கிரஹக் யோஜனா” திட்டத்தின் கீழ், டிசம்பர் 25 முதல் ஏப்ரல் 14 வரை தினமும் 15,000 பேருக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும். அது மட்டுமின்றி வாரம் 7,000 பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். அதில் அதிகபட்ச தொகையாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
“டிஜி தன் வியாபார் யோஜனா” திட்டத்தின் கீழ், டிசம்பர் 25 முதல் எப்ரல் 14 வரை வாரம் 7,000 வணிகர்களுக்கு அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை பரிசுகள் வழங்கப்படும்.

மெகா பரிசு:
மெகா பரிசானது, நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு ஏப்ரல் 14-ம் தேதி வழங்கப்படும். “லக்கி கிரஹக் யோஜனா” திட்டத்தின் கீழ், நுகர்வோருக்கு முதல் மெகா பரிசாக 1 கோடி ரூபாயும், இரண்டாவது பரிசாக 50 லட்சம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 25 லட்சம் ருபாயும் வழங்கப்படும். அதேபோல, “டிஜி தன் வியாபார் யோஜனா” திட்டத்தின் கீழ், வணிகர்களுக்கு முதல் பரிசாக 50 லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 25 லட்சம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 5 லட்சம் ருபாயும் வழங்கப்பட உள்ளது.
வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் டிஜிட்டல் பரிவர்த்தனையின் அடையாள எண்ணைக் கொண்டு பரிசு பெறுவோர் தேர்வு செய்யப்படுவார்கள் என அமிதாப் காந்த் கூறினார்.
– முரளி.சு, மாணவப் பத்திரிகையாளர்

Related videos

Leave a Reply

%d bloggers like this: