11 ஐபிஎஸ் அதிகாரிகள் ஐஜி , ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு – விரைவில் அறிவிப்பு

கடந்த ஜனவரி மாதமே மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தும் தேர்தல் பிற காரணங்களுக்காக தள்ளிப்போன 5 ஏடிஜிபிக்கள் , 6 ஐஜிக்கள் பதவி உயர்வு விரைவில் வர உள்ளது.
தமிழக காவல்துறையில் கண்காணிப்பாளர்கள் டிஐஜிக்களாகவும், டிஐஜிக்கள் ஐஜிக்களாகவும் , ஐஜிக்கள் ஏடிஜிபிக்களாகவும் , ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாக பதவி உயர்வுக்கு காத்திருந்தனர்.
இதில் எஸ்பிக்கள் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுவிட்டனர் . டிஐஜிக்கள் ஐஜிக்களாக பதவி உயர்வு பெற்றனர். ஏடிஜிபிக்கள் நான்கு பேர் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றனர். ஆனால் 6 ஐஜிக்கள் கடந்த ஜனவரி மாதமே மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தும் 12 மாத காலமாக பதவி உயர்வு அளிக்கப்படவில்லை .
ஐஜிக்கள் ரவி, அம்ரிஷ்புஜாரி, ஜெயந்த் முரளி, கருணாசாகர், சிவனாண்டி, மஞ்சுநாதா ஆகியோருக்கு ஏடிஜிபி பதவி உயர்வும் , ஏடிஜிபிக்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ், ராதாகிருஷ்ணன் , மகேந்திரன் ஆகியோருக்கு டிஜிபி பதவி உயர்வையும் ஒரே நேரத்தில் ஒப்புதல் அளித்து மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதில் ஏடிஜிபிக்கள் நான்கு பேரும் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றனர். தேர்தல் அறிவிப்பு வந்த காரணத்தால் ஐஜிக்கள் பதவி உயர்வு தள்ளி போனது.
ஏடிஜிபிக்கள் பதவி உயர்வு மத்திய அரசு ஒப்புதல் அளித்தும் தரப்படவில்லை. இதனால் பதவி உயர்வு வரும் என இதோ அதோ என ஆறு பேரும் காத்திருந்தனர். ஆனால் தேர்தல் முடிவு வந்து மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தும் கடைசி வரை பதவி உயர்வு அறிவிக்கப்படவில்லை.
சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்காத கதையாக மாநில அரசு இதுவரை பதவி உயர்வு தராததால் வருத்தத்தில் இருந்தனர் ஆறு ஐபிஎஸ் அதிகாரிகள். இதில் ஐஜி சிவனாண்டி கடந்த ஜூலை 31 அன்று ஓய்வு பெற்றார். இவர் ஏடிஜிபி ஆகாமல் ஐஜியாகவே ஓய்வு பெற்றார்.
1991 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரிகள் 6 பேரில் ஒருவர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் மீதமுள்ள 5 பேருக்கும் பதவி உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துவிட்டார்.
ஆனால் அவரது திடீர் மறைவு காரணமாக மீண்டும் இந்த அறிவிப்பு தள்ளிபோனது. இதற்கிடையே டிஐஜிக்கள் 6 பேருக்கான பதவி உயர்வுக்கு ஒப்புதல் கிடைத்து, முதல்வர் அதில் கையெழுத்திட்டுள்ளார். அதனால் விரைவில் டிஐஜிக்கள் 6 பேருக்கு ஐஜிக்கான பதவி உயர்வும் சேர்ந்து வருகிறது.
சிறைத்துறை டிஐஜி நாகராஜ் , ரயில்வே டிஐஜியாக இருக்கும் ஜெ.பாஸ்கரன் , மனித உரிமை ஆணைய டிஐஜியாக இருக்கும் என்.பாஸ்கரன் , லஞ்ச ஒழிப்பு டிஐஜி சமுத்திரபாண்டி , முகமது அனிபா மற்றும் வேலூர் சரக டிஐஜி தமிழ்சந்திரன் உள்ளிட்ட 6 பேரே பதவி உயர்வு பெறும் டிஐஜிக்கள் ஆவர்.
ஐஜி அம்ரீஷ் புஜாரி போலீஸ் அகடாமி ஐஜியாக உள்ளார் , அடுத்து எம்.ரவிகுமார் ஆவின் ஐஜியாக இருக்கிறார், அடுத்து ஜெயந்த் முரளி டிஜிபி அலுவலக நிர்வாக ஐஜியாக இருக்கிறார், அடுத்து கருணாசாகர் சென்னை ஆணையரக நவீனமயமாக்கள் பிரிவு ஐஜியாக இருக்கிறார், ஐந்தாவது ஐஜியான மஞ்சுநாதா திருச்சி கமிஷனராக உள்ளார்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: